திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.70 திருமயிலாடுதுறை - திருவிராகம்
பண் - பஞ்சமம்
ஏனவெயி றாடரவொ டென்புவரி
    யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
    படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகதியின்
    மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
    மூசுமயி லாடுதுறையே.
1
அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில்
    கொன்றையொட டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது
    வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
    வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
    சிந்துமயி லாடுதுறையே.
2
தோளின்மிசை வரியரவம் நஞ்சழல
    வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது
    காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
    யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம்
    நாறுமயி லாடுதுறையே.
3
ஏதமிலர் அரியமறை மலையர்மக
    ளாகியஇ லங்குநதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை
    கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை
    கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
    கமழுமயி லாடுதுறையே.
4
பூவிரி கதுப்பின்மட மங்கையர
    கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி
    லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி
    சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
    கொள்ளுமயி லாடுதுறையே.
5
கடந்திகழ் கருங்களி றுரித்துமையும்
    அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய
    வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
    தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
    நாறுமயி லாடுதுறையே.
6
அவ்வதிசை யாரும்அடி யாருமுள
    ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி
    யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு
    தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம்
    நாறுமயி லாடுதுறையே.
7
இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ
    டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ
    ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம்
    மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி
    கின்றமயி லாடுதுறையே.
8
ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக
    நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக
    நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி
    ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை
    யாடுமயி லாடுதுறையே.
9
மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும்
    அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு
    மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
    தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு
    சோலைமயி லாடுதுறையே.
10
நிணந்தரும் யானநில வானமதி
    யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
    வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
    பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்தமிழ்ப் பத்துமிசை யாலுரைசெய்
    வார்பெறுவர் பொன்னுலகமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com